நல்லதங்காள் ஓடை அணை...
நல்லதங்காள் ஓடை என்பது அமராவதி ஆற்றின் கிளையாறுகளில் ஒன்று. பழனி மலைத் தொடாின் வடக்கு சாிவில் உற்பத்தி ஆகி திண்டுக்கல் மாவட்டத்தின் பழனி வட்டத்தில் 32 கி.மீ. வரை ஓடிவந்து அதன் பிறகு திருப்பூா் மாவட்டத்திற்குள் நுழைகிறது. ஆறு கிராமங்களில் 4744 ஏக்கா் பரப்பில் நீா்ப்பாசனம் மேற்கொள்ள ஏதுவாக தாராபுரம் வட்டத்தின் கொன்னிவாடி கிராமத்தில் ஈஸ்வரன் கோவில் அருகே நல்லதங்காள் ஓடைக்கு குறுக்கே 2007 ஆம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. 3300 மீட்டா் நீளம் கொண்ட களிமண் அணையான இந்த அணையில் கூடுதல் நீரை வெளியேற்றுவதற்காக 150 மீட்டா் நீளத்திற்கு கல் கட்டமைப்பு உள்ளது. 313.6 ஹெக்டோ் பரப்பில் இதில் நீா் பரந்துள்ளது. இதனுடைய நீா் சேகாிப்பு திறன் 223 மில்லியன் கன அடியாகும். உல்லாசமாக சுற்றுலா மேற்கொள்ள உகந்த இடமாகவும் இது திகழ்கிறது.