பல்லடம் அடுத்து உள்ள அரசன்காடு பகுதியில் வசித்து வருபவர் 62 வயதான மாரி. இவரது மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மகன் சுடலை ராஜாவுடன் வசித்து வருகிறார். சுடலை மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கு இரண்டரை வயதில் மகாலட்சுமி என்ற மகள் இருக்கிறாள். மகன், பேத்தியுடன் மாரி வசித்து வந்துள்ளார். தந்தை, மகன் இருவருமே பெயின்டர்கள்.
இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு வேண்டுதலை நிறைவேற்ற மாரி பழனி முருகன் கோயிலுக்கு பேத்தியுடன் சென்றுள்ளார். திரும்பி வருவதற்காக மதியம் பேத்தியுடன் பழனி பஸ் ஸ்டேண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அங்கு வந்தார். வலிய வந்து மாரியிடம் நெருங்கி நின்று பேச்சு கொடுத்துள்ளார். தான் ஒரு அனாதை என்று பேச்சை ஆரம்பித்து, கடைசியில் வீட்டு வேலைக்கு வரட்டுமா என்று கேட்டுள்ளார்.
அந்த பெண் மீது பரிதாபத்துடன் சபலமும் வந்துவிட்டது மாரிக்கு. யார், என்ன என்று கூட கேட்காமல் பஸ்ஸில் ஏற்றி வீட்டுக்கு வந்துவிட்டார். வீட்டில் மகனும் வெளியூர் போயிருந்ததால் இன்னும் வசதியாக போயிற்று. கடைக்கு போய் மது வாங்கி வந்துள்ளார். நன்றாக குடித்து விட்டு அந்த பெண்ணுடன் ஜாலியாக இருந்துள்ளார். பிறகு போதையில் அப்படியே தூங்கியும் விட்டார்.
பொழுது விடிந்து பார்த்தால், பேத்தியையும் காணோம், பொண்ணையும் காணோம். எங்கெங்கோ தேடிப்பார்த்து, கடைசியில் வெளியூரில் உள்ள மகனுக்கு தகவல் தந்தார்.. மகனும் போலீசாருக்கு புகார் தர, போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது சம்பந்தப்பட்ட அந்த மர்மப் பெண், குழந்தையை அழைத்து செல்வது பதிவாகி இருந்தது. அப்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.