திருப்பூரில் உள்நாட்டு பின்னலாடை நிறுவனங்கள், கோடை கால சீசனை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. திருப்பூரில் இயங்கும் உள்நாட்டுகளுக்கான ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு, குளிர் காலத்தைவிட, கோடை காலத்தில் தான் அதிகளவு ஆர்டர் கிடைப்பது வழக்கம். நாடு முழுவதும் கடும் குளிர் சீதோஷ்ண நிலை நிலவுவதால், கடந்த மூன்று மாதங்களாக, திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகையும் குறைந்து காணப்படுகிறது.
நடப்பு ஆண்டில் பஅதிகளவு குளிர்கால ஆர்டர் வருகை சரிந்ததால், தொழில்துறையினர் கவலை அடைந்துள்ளனர். வரும் பிப்ரவரி மாத இறுதியிலிருந்து, மும்பை, கல்கத்தா, மகாராஷ்டிரா என நாட்டின் பல் வேறு நகரங்களிலிருந்து, கோடை கால ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
பொங்கல் விடுமுறைக்குப் பின், தொழிலாளர்கள் மீண்டும் திருப்பூருக்கு திரும்பி வருகின்றனர். இனிவரும் நாட்களில், பின்னலாடை உற்பத்தி துறை சூடுபிடிக்கும் என தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர். சில நிறுவனங்கள், கோடை கால ஆடை தயாரிப்பை துவக்கிவிட்டன. அதனால், துணி வர்த்தகமும் அதிகரித்து வருகிறது. குளிர் காலம் ஏமாற்றினாலும் கூட, கோடை நிச்சயம் கைகொடுக்கும், வர்த்தகம் அதிகரிக்கும் என்கிற நம்பிக்கை தொழில்துறையினர் மத்தியில் உருவாகியுள்ளது.