சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வுகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு கடந்த 5-ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து உடனடியாக குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் குழந்தைக்கு தாய் மூலமாக கொரோனா பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சியோசியோ என பெயர்வைக்கப்பட்ட அந்த குழந்தையை டாக்டர்கள் தீவிர கண்காணிப்பிற்கு உள்படுத்தினர். ஆனால் மற்ற கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை எதுவும் குழந்தை சியோசியோவுக்கு அளிக்கப்படவில்லை. வைரஸ் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதே தவிர வைரஸ் தடுப்பு மருந்துகள் எதுவும் வழங்கப்படவில்லை.