மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாயில், பத்தாயிரம் கோடி ரூபாயை இன்று செலுத்திவிட்டதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.
தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது மொத்த வருவாயில் இருந்து மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய உரிமக் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை செலுத்தத் தவறியது தொடர்பான வழக்கில், நிலுவைத் தொகையை உடனே செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபரில் உத்தரவிட்டது.
ஆனால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதைத் செலுத்தத் தவறியதை அடுத்து, அந்த நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் கம்பெனி இயக்குநர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப் போவதாக கடந்த 14 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
இதை அடுத்து , ஏர்டெல் நிறுவனம் இன்று 10 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்தி விட்டதாகவும் எஞ்சிய தொகையை, வழக்கின் அடுத்த விசாரணை தினமான மார்ச் 17 ஆம் தேதிக்குள் செலுத்தி விடுவதாகவும் தெரிவித்துள்ளது.