பல்லடம் அருகே உள்ள சின்னிய கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் வயது 70. இவர் விவசாயி. இப்பகுதியில் செட்டிப்பாளையம் ரோட்டில் தனக்கு சொந்தமான 70 சென்ட் இடத்தில் வீடு கட்டி மனைவி சித்ரா, மகன் பிரபு, மருமகள் இசையமுது ஆகியோருடன் வசித்து வருகிறார். மகன் பிரபு தொழில் தொடங்க அவினாசி பாங்க் ஆப் இந்தியா கிளையில் ரூ. 1.3 கோடிக்கு இடத்தின் பெயரில் ஈஸ்வரன் கடனாக பெற்றார். கடந்த 2015-ம் ஆண்டு வரை ரூ. 90 லட்சத்தை திருப்பி செலுத்தி உள்ளார்.
வட்டியுடன் சேர்த்து ரூ. 62 லட்சம் பாக்கி இருந்ததால் கோர்ட்டு உத்தரவின் படி வங்கி நிர்வாகத்தினர் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள ஈஸ்வரனின் வீட்டுக்கு வந்தனர். இதற்கு ஈஸ்வரன் மற்றும் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஈஸ்வரன் மனைவி சித்ரா, மகன் பிரபு, மருமகள் இசையமுது ஆகியோர் வீட்டிற்குள் சென்று திடீரென மண் எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை அங்கு நின்ற போலீசார் மற்றும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் தாசில்தார் சிவ சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் சுஜாதா மற்றும் வங்கி அதிகாரிகள் ஈஸ்வரன் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நிலுவையில் உள்ள கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து கட்ட 2 மாத அவகாசம் வேண்டும் என்ற ஈஸ்வரன் குடும்பத்தினரின் கோரிக்கையை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து வங்கி நிர்வாகத்தினர் அங்கிருந்து சென்றனர்.
பல்லடம்; ஜப்தி செய்ய வந்த அதிகாரியை கண்டித்து தீ குளிக்க முயற்சி