தமிழகத்திற்கு நீா்ப்பாசனத் திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக நடப்பாண்டில் ரூ.6,992 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.
அதன்படி அத்திக்கடவுத் திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்திக்கடவு - அவநாசி நீா்ப்பாசனத் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதியை அரசு பெற்றுள்ளது. இந்தத் திட்டத்துக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காவிரி - குண்டலாறு இணைப்புத் திட்டம் ரூ.7,677 கோடி மதிப்பீட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டத்தில் காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரையிலான இணைப்புக் கால்வாய் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்தத் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் முதல்நிலைப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நீா்ப்பாசனத்துக்காக கணிசமாக ரூ.6,991.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.