திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் மாமனார் மருமகனை வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜசேகர் இவருக்கு வயது 29. வெள்ளகோவில் புதிய பஸ் நிலையத்தில் பூக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன் வெள்ளகோவில் குமார வலசு கமிட்டியார் தோட்டத்தை சேர்ந்த சூர்யா என்பவருடைய மகள் 19 வயதான சினேகா என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகளும், 10 நாட்களே ஆன கைகுழந்தையும் உள்ளது. நினேகாவின் தந்தை சூர்யாவும் வெள்ளகோவில் பஸ் நிலையம் பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார்.
மாமனார்- மருமகன் இடையே வியாபாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ராஜசேகருக்கு கடந்த 8 வருடத்திற்கு முன் ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்று இருப்பது சூர்யாவுக்கு தெரிய வந்தது. அவர் மருமகன் மீது ஆத்திரத்தில் இருந்தார். நேற்று இரவு 7.30 மணிக்கு குடிபோதையில் வெள்ளகோவில பஸ் நிலையத்திற்கு சூர்யா வந்தார். அங்கு நின்று கொண்டிருந்த ராஜசேகருடன் சண்டையில் ஈடுபட்டார்.
முதல் திருமணத்தை மறைத்து விட்டு எனது மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டது ஏன்? என கேள்வி எழுப்பினார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென சூர்யா தான் மறைத்து வைத்திருந்த கத்திரிகோலால் ராஜசேகரின் நெற்றி, பின் தலை பகுதியில் குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
இதனை பார்த்து அருகில் உள்ளவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜசேகரை மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.