விண்வெளி அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் யுவிகா திட்டத்தில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மாணவர்களுக்கு யுவிகா என்ற பெயரில் 'இளம் விஞ்ஞானி திட்டம்' என்ற ஒரு சிறப்பு திட்டத்தை கடந்தாண்டு அறிவித்தது. இத்திட்டத்தில், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வரும், வரும் மே 11 முதல் 22ம் தேதி வரை கோடை விடுமுறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களிடம், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளிதுறை சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இத்திட்டத்தின் நோக்கமாகும். இதில் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், அனுபவங்களை பகிர்தல், ஆய்வகங்களை பார்வையிடல், செயல்முறை விளக்கம் அளித்தல் ஆகியவை இடம்பெறும்.ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், 3 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 2018-19 கல்வியாண்டில் 8ம் வகுப்பு முடித்து 2019-20 ம் கல்வியாண்டில் 9 ம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள், இந்த திட்டத்தில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள மாணவர்கள், www.isro.gov.in என்ற இணையதளத்தில், பிப்., 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர் பெயர் பட்டியல், மார்ச், 2ல், வெளியிடப்படும். தேர்வு செய்யப்படுவோருக்கு, தங்குமிடம், பயணச்செலவு, உணவு இஸ்ரோ மூலம் வழங்கப்படும். ஆகவே, விருப்பமுள்ள, தகுதி வாய்ந்த மாணவர்கள் விண்ணப்பித்து, வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு, உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது. https://www.isro.gov.in/update/22-jan-2020/young-scientist-programme-2020 என்ற இணையதளலிங்க் மூலம் கூடுதல் தகவல்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
இளம் விஞ்ஞானி திட்டத்தில் பயிற்சி பெற மானவர்களுக்கு அறிய வாய்ப்பு