இத்திருத்தலத்திற்கு ஒருமுறை சென்று வந்தால் பாவங்கள் அடியோடு நீங்கிவிடும். கேரளா மாநிலம் த்ரிசூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருவில்வமலா வில்வாத்ரிநாதர் திருக்கோயில்.
கோவிலின் மூலவர்: ஸ்ரீ ராமர் மற்றும் லக்ஷ்மணர்
இக்கோவிலின் சிறப்பு:
ஸ்ரீ ராமர் மற்றும் லக்ஷ்மணருக்கு அமைந்த திருக்கோயில். இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற பிறகு, ஸ்ரீ ராமரும், அவரது இளவல் லக்ஷ்மணரும் இவ்விடம் வந்ததால், திருக்கோயில் வளாகத்தில் சீதையை காண முடியாது.
சீதையைக் காணவில்லை" என ஸ்ரீ ராமர், அனுமன் உட்பட வேறு பல வானர வீரர்களிடம் உரைத்த திருத்தலம்.
மூலவரான ஸ்ரீ ராமர் சுயம்பு மூர்த்தி ஆவார்.
அரிதாக லக்ஷ்மணருக்கு அமைந்த திருக்கோயில்களில் இதுவும் ஒன்று.
கடல்மட்டத்திலிருந்து சுமார் 100 அடி உயரமுள்ள குன்றின் மீது திருக்கோயில் அமைந்துள்ளது.
ஸ்தல வரலாறு:
திருக்கோயிலின் தலவரலாறு பெருமாளின் ஆறாவது அவதாரமான பரசுராமருடனும், ஏழாவது அவதாரமான ஸ்ரீ ராமருடனும், காஷ்யப மகரிஷியின் மகனான அமலக மகரிஷியுடனும் தொடர்புடையது. ஜமதக்னி முனிவர், ரேணுகா தேவி ஆகியோருக்கு மகனாக பரசுராமர் அவதரித்தார். கார்தவீரிய அர்ஜுனன் என்ற கொடிய மன்னனை வதம் செய்தார். அதனால் ஆத்திரம் அடைந்த கார்தவீரிய அர்ஜுனனின் மகன்கள், ஜமதக்னி முனிவரை வதம் செய்தனர். கணவனோடு உடன்கட்டை ஏறினாள் ரேணுகா தேவி. பெற்றோரை இழந்த பரசுராமர், மன்னர்கள் அனைவரையும் பரசு (கோடாரி ) என்ற ஆயுதம் கொண்டு கொன்று குவித்தார். சினம் தணிந்த பிறகு, தன் செயலை எண்ணி வேதனை அடைந்தார். இறந்த மன்னர்களின் நிலங்களை எல்லாம் அந்தணர்களுக்கு வழங்கினார். பிறகு, தன் பரசுவை கடலில் எரிந்து, அது விழுந்த எல்லை வரை நிலமாக பெற்று, அந்த நிலப்பரப்பில் 108 சிவாலயங்கள், 108 பகவதி திருக்கோயில்கள் மற்றும் 5 சாஸ்தா திருக்கோயில்கள் அமைத்தார். அதன் பிறகும், அவரது மனம் அமைதி அடையவில்லை. எனவே தவத்தில் ஈடுபட்டார்.
பரசுராமரால் வதக்கப்பட்ட மன்னர்களின் ஆன்மாக்கள் முக்தி அடையாமல் அலைந்து கொண்டிருந்தன. அவை பரசுராமரிடம் வந்து தங்களுக்கு முக்தி வழங்குமாறு வேண்டின. பரசுராமரும் நல்லதொரு மார்க்கம் அறிய மகாவிஷ்ணுவை வேண்டினார். பரசுராமருக்கு மகாவிஷ்ணு காட்சி கொடுத்து, தனது குடும்பம் மற்றும் பரிவாரங்களோடு திருவில்வமலா வந்திருக்கும் சிவபெருமானை சென்று காணுமாறு பணித்தார். பரசுராமரும் அவ்வாறே செய்தார். சிவபெருமானை வணங்கி நின்றார் பரசுராமர். அவரிடம், மகாவிஷ்ணுவின் சிலை ஒன்றை கொடுத்து, அது தான் கயிலையில் வைத்து வழிபட்ட சிலை என்று கூறினார் சிவபெருமான். அச்சிலையை திருவில்வமலாவில் நிறுவி, பூஜித்து வர மன்னர்களின் ஆன்மாக்களுக்கு முக்தி கிட்டும் என்று கூறினார். பரசுராமரும் அவ்வாறே செய்தார். இதுவே, திருக்கோயிலில் உள்ள ஸ்ரீ ராமர் சிலை ஆகும்.
பரசுராமர் வாழ்ந்த சமகாலத்தில், காஷ்யப மகரிஷியின் மகனான அமலக மகரிஷி, திருவில்வமலாவில் தவம் செய்தார். அவரது தவத்தால் தேவலோக தலைவன் பதவிக்கு பாதகம் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சனான் தேவேந்திரன். தேவலோக கன்னிகைகளை அனுப்பி, அமலக மகரிஷியின் தவத்தை கலைக்க முயன்றான். ஆனால், அமலக மகரிஷி தவம் கலையவில்லை. வேறுவழி அறியாமல் காஷ்யப மகரிஷியிடம் சென்று முறையிட்டான் தேவேந்திரன். தன் மகன் முற்றும் துறந்தவன். அவனுக்கு தேவலோக தலைவன் பதவியோ, தேவலோக கன்னிகைகளோ தேவையில்லை என்று கூறினார் காஷ்யப மகரிஷி. அமைதி அடைந்த தேவேந்திரன் தேவலோகம் சென்று விட்டான். சிறிது காலங்களுக்கு பிறகு, அசுரர்கள் அமலக மகரிஷியின் தவத்தை கலைக்க முயன்றனர். அப்போது, அமலக மகரிஷி கண் மலர்ந்தார். அவர் கண்களிலிருந்து வெளிப்பட்ட அக்னி பொறியில் அசுரர்கள் அனைவரும் எரிந்து சாம்பல் ஆனார்கள். மீண்டும் தவத்தில் மூழ்கிபோனார் அமலக மகரிஷி. அவரது கடும் தவத்தில் மகிந்துபோன மகாவிஷ்ணு, அமலக மகரிஷிக்கு காட்சி கொடுத்தார். வரமாக, மகாவிஷ்ணுவின் சிலையைக் கொடுத்தார். அச்சிலையை திருவில்வமலாவில் நிறுவினார் அமலக மகரிஷி. இதுவே, திருக்கோயிலில் உள்ள லக்ஷ்மணர் சிலை ஆகும்.
ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையைத் தேடி திரிந்த ஸ்ரீ ராமர், தன் இளவலான லக்ஷ்மணருடன் திருவில்வமலாவை அடைந்தார். வானர வீரர்களுடன், சுக்ரீவன், அனுமன், ஜாம்பவான், நலன் மற்றும் நீலனைக் கண்டு, தன் மனைவியான சீதையைக் காணவில்லை எனக் கூறினார். இந்நிகழ்வு நடந்ததும் திருவில்வமலாவில் தான்.
ஸ்தல பெருமைகள்:
கேரள மாநிலத்தில் ஸ்ரீ ராமருக்கு அமைந்துள்ள நான்கு திருத்தலங்களுள் திருவில்வ மலாவும் ஒன்று. த்ரிப்றையார், கடவல்லூர் மற்றும் திருவன்காட் ஆகியவை பிற திருத்தலங்களாகும். புனிதமான பரதபுழா ஆறு திருக்கோயிலிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. குன்றின் மீதிருந்து ஆற்றைக் காண முடியும்.
அமலக மகரிஷியால் எரிந்து போன அசுரர்களின் சாம்பல் குவியல் காலபெரு வெள்ளத்தில் இறுகி பெரும் பாறையாக மாறிப்போனது. இந்த பாறைக்கு "ராக்ஷசப்பறா" என்று பெயர். திருக்கோயிலில் இரண்டு சன்னதிகள் உள்ளன. இரண்டிலும் மகாவிஷ்ணுவின் சிலைகள் உள்ளன. ஒன்று கயிலையில் சிவபெருமானால் ஆராதிக்கப்பட்ட சிலை. மற்றொன்று அமலக மகரிஷிக்கு மகாவிஷ்ணு அளித்த சிலை. இவையே, ஸ்ரீ ராமர் மற்றும் லக்ஷ்மணராக போற்றப்படுகின்றன. ஸ்ரீ ராமரின் சன்னதி மேற்கு நோக்கியும், லக்ஷ்மணரின் சன்னதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளன. சீதையைக் காணவில்லை என ஸ்ரீ ராமர் வானர வீரர்களிடம் கூறிய இடம் இதுவே. இந்நிகழ்வு நடந்த இடத்தில் பெரிய ஆலமரம் உள்ளதை இன்றும் காணலாம். இம்மரத்தில் கௌலி (பல்லி) பார்ப்பது நல்லது என்ற நம்பிக்கை பக்தர்களிடம் நிலவுகிறது. மேலும், சீதையைக் காணவில்லை என்று கூறிய தலத்தில், இன்றும் சீதைக்கு சிலை இல்லை என்பது சிறப்பு. திருக்கோயிலுக்கு மிக அருகில் "புனர்ஜன்ம குகை" உள்ளது. குருவாயூர் ஏகாதசி (நவம்பர்/டிசம்பர் மாதம்) அன்று மட்டும் இந்த குகையினுள் மனிதர்கள் செல்ல அனுமதி உண்டு. மற்ற நேரங்களில், முக்தி கிட்டாமல் அலைந்து கொண்டிருக்கும் ஆன்மாக்கள் குகையினுள் இருக்கும் என்பது நம்பிக்கை. புனர்ஜன்ம குகை, தேவசிற்பியான மயன் உருவாக்கியது. மாசி மாதத்தில் வரும் ஏகாதசி அன்று பெருமளவில் பக்தர்கள் கூடுகின்றனர். நூற்றுக்கணக்கான வாழைப்பழங்களை தோல் நீக்கி, பெரிய துணியில் இட்டு நைவேத்தியமாக பக்தர்களுக்கு வழங்குகின்றனர். ஸ்ரீ ராமர் மற்றும் லக்ஷ்மணர் இவ்விடம் வந்தபோது, வானர வீரர்கள் குவிந்து இருந்ததையும், பழவகைகளை உண்டு பசியாறியதையும் பறைசாற்றும் சம்பவமே இது.
திருவில்வமலா குன்றின் கீழ் தங்கத்தால் ஆன வில்வ மரம் இருப்பதாக கூறப்படுகிறது. இது தெய்வீக மரம் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது. ஸ்ரீ ராமர் சிலைக்கு முன் உள்ள குழியில் வற்றாத தீர்த்தம் பண்டைய காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, இது வற்றிவிட்டது. கடலிலிருந்து பரசுராமர் பெற்ற நிலப்பரப்பில் கேரை (தென்னை) மரங்கள் நிறைந்திருந்ததால், அந்த நிலப்பரப்பிற்கு "கேரளா" என்ற பெயர் ஏற்பட்டது. பரசுராமரால் உருவாக்கப்பட்ட திருக்கோயில்கள் பல இன்றும் கேரள மாநிலத்தில் உள்ளன. இவையாவும், "பரசுராம ஷேத்திரம்" என போற்றப்படுகின்றன.
இக்கோவிலுக்கு செல்ல
கோவையிலிருந்து சுமார் 84.3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
பாலக்காட்டிலிருந்து சுமார் 35.6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
ஷோரனுரிலிருந்து சுமார் 25.9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
த்ரிசூரிலிருந்து சுமார் 48.1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.