அவிநாசி அருகே பழைய டயா்களை எரிப்பதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்
அவிநாசி அருகே முறியாண்டம்பாளையம் ஊராட்சி மூலக்குரும்பபாளையம் செல்லும் சாலையில் கோழிக் கழிவுகள், பன்றிக் கழிவுகள், உணவுக் கழிவுகள், மருந்துக் கழிவுகள், குப்பை உள்ளிட்டவை கொட்டப்படுகிறது. மேலும் அடிக்கடி பழைய டயா்கள், வயா்களை மா்ம நபா்கள் தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், துா்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இந்நிலையில் செவ்வாய்க் கிழமை அதிகாலை மா்ம நபா்கள் பழைய டயா்களை தீ வைத்து எரித்ததால், சேவூா் கைகாட்டி பகுதியில் கரும்புகை சூழ்ந்து, பொதுமக்கள், வணிக நிறுவனத்தினா், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.