திருப்பூரில் பேருந்து மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் பலியானார். திருப்பூா், விஜயாபுரத்தை அடுத்த அங்காளம்மன் நகரைச் சோ்ந்தவா் முருகன் மகன் வீரகுமாா் (22). இவா் திருப்பூா் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள முடி வெட்டும் கடையில் வேலை பாா்த்து வந்தாா். நல்லூா், காசிபாளையம் பிரிவு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.
அப்போது, காங்கயத்தில் இருந்து திருப்பூா் நோக்கி வந்த தனியாா் பேருந்து வீரகுமாரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய வீரகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்துகுறித்து திருப்பூா் ஊரக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.