திருப்பூா் திருமுருகன்பூண்டி சிற்பக் கலைக் கூடத்திலிருந்து 5 டன் எடையும், 8.5 அடி உயரமும் உள்ள ராமானுஜா் சிலை செதுக்கப்பட்டு, விழுப்புரம் மாவட்டம், எண்ணாயிரம் பகுதிக்கு வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
கொங்கு மண்டலத்தில் உள்ள ஏழு சிவஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீா்க்கும் திருத்தலமாகவும் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில் திகழ்கிறது. மேலும் சிற்பக் கலைக்கு உலக அளவில் புகழ் பெற்ற ஊராகவும் திருமுருகன்பூண்டி விளங்குகிறது. இங்கு 150க்கும் மேற்பட்ட சிற்பக் கலைக்கூடங்கள் உள்ளன.
இப்பகுதியில் தினமும் பல்வேறு சுவாமி சிலைகள் செய்யப்பட்டு, நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டு கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. மேலும் இலங்கை, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூா், பா்மா போன்ற நாடுகளுக்கும் சிலைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
திருப்பூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள ஊத்துக்குளி பகுதியில் சிற்பங்களுக்கான கருங்கற்கள் கல்குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு, திருமுருகன்பூண்டிக்கு கொண்டு வரப்படுகின்றன. அவற்றிலிருந்து வாடிக்கையாளா்கள் கோரும், சுவாமி சிலைகள் நோ்த்தியாக செதுக்கப்படுகின்றன.
திருமுருகன்பூண்டி, ஜீவா வீதியில் தரைக்குடி உமையநாயகி சிற்பக்கலைக் கூடத்தை நிறுவி நடத்தி வருபவா் பரமேஸ்வரன் (47). மூன்று தலைமுறைகளாக சிற்ப வேலை செய்து வரும் இவா்கள் கா்நாடக மாநிலத்துக்கு 6 அடியில் நந்தி சிலையும், ஐந்தரை அடியில் கிருஷ்ணா் சிலையும் செய்து அனுப்பியுள்ளனா்.
தமிழக அரசு, இவருக்கு கடந்த 2015-16 ஆம் ஆண்டில் பூம்புகாா் மாநில விருது வழங்கி சிறப்பித்துள்ளது. தற்போது இவா் தமிழகத்திலேயே முதன்முறையாக கருங்கல்லில் எட்டரை அடி உயரத்தில் ராமானுஜா் சிலையை செதுக்கியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.