திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இருந்து மங்கலம் செல்லும் ரோட்டில், 63.வேலம்பாளையம் என்ற பகுத்தெயில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உடையில் வாலிபர் ஒருவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தார். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உடையில் இருந்த அவர் மீது சந்தேகமடைந்த பொதுமக்கள் பல்லடம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்து பல்லடம் போலீசார் விசாரித்ததில் அவரது பெயர் தினேஷ் என்று தெரியவந்தது. மேலும் அவர் எந்த காவல் நிலையம் என்று விசாரித்தனர். அப்போது அந்த போலீஸ் வேடமிட்ட நபர் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு தப்பித்து செல்ல முயற்சித்தார். அவரை நிஜ போலீசார் துரத்தி சென்றார். அதி வேகமாக சென்ற அந்த நபர் பல்லடம் & மங்கலம் ரோட்டில் எதிரே வந்த வேனில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது பற்றி, பல்லடம் போலீஸ் டி.எஸ்.பி., முருகவேல் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்,போலீஸ் வேடமிட்டு வந்து, பலியான வாலிபர் பல்லடம் அனுப்பட்டி ஊராட்சி கள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் 23 என்பது தெரியவந்தது. அவரது தந்தை சுப்பிரமணியம் இறந்து விட்டதால், அஜித் குமார் தாய் சாந்தியுடன் வசித்து வந்துள்ளார்.
வேலை இல்லாமல் சுற்றிய இவர், பணம் சம்பாதிக்க போலீஸ் வேடமிட்டு வாகன தணிக்கை செய்தது தெரியவந்தது. பணத்துக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேடமிட்டு பொதுமக்களிடம் வசூல் செய்த தினேஷ், நிஜ போலீசிடம் இருந்து தப்பித்து செல்லும் போது, வேனில் அடிபட்டு உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.