அம்பலமூலா நிலகிரி வயநாடு ஆதிவாசிகள் நல சங்கத்தில் மாணவர்களுக்கு திசைக் காட்டி கல்வி விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் ஊடக மையம், நிலகிரி வயநாடு ஆதிவாசிகள் நல சங்கம் ஆகியன சார்பில் பழங்குடியின மாணவர்களுக்கு திசைக்காட்டி கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஆதிவாசிகள் நல சங்க ஒருங்கிணைப்பாளர் கோகுல் வரவேற்றார். ஆதிவாசிகள் நல சங்க திட்ட மேலாளர் ரொனால்ட் தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம், பந்தலூர் கிளை நூலகர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மக்கள் ஊடக மைய இயக்குனர் சித்திர வேல் பேசும்போது
மாணவர்கள் விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் எனில் தயக்கம் இல்லாமல் இருக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள் உரிய வழிகாட்டலுடன் சென்றால் எளிதில் சாதிக்க முடியும். விளையாட்டுகளில் சாதிப்பவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு பல்கலை கழகம் மூலம் பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றில் பட்டம் பெற்று வேலைவாய்ப்புகள் பெறலாம். விளையாட்டு பயிற்றுனர், பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள், ஜிம் போன்ற உடற்பயிற்சி நிறுவனங்கள் செய்தல், உடல் கட்டமைப்பு துறைகள், உள்ளிடட பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெற முடியும். விளையாட்டு போட்டிகள் பங்கேற்போர் உடல்நலம் பேணுதல் அவசியம். நமது திறமைகளை அறிந்து அதில் ஈடுபாட்டோடு பங்கேற்று வருவதன் மூலம் சாதிக்க முடியும் என்றார்.
பந்தலூர் விளையாட்டு ஆர்வலர் தாஸ் பேசும்போது. விளையாட்டுகளில் பங்கேற்றவர்கள் கல்வி முதல், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை பெற வாய்ப்பு உள்ளது. விளையாட்டு வீரர்கள் தொடர் பயிற்சி பெற்று முயற்சி எடுத்தால் சாதிக்க முடியும். விளையாட்டு வீரர்கள் முறையான பயிற்சி அளிக்க தயாராக உள்ளோம்.
திறமைகள் இருந்தால் எல்லாம் சாதிக்க முடியும். பெண்களுக்கு விளையாட்டு துறையில் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
எனவே, விளையாட்டுகளில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பழங்குடியின மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி சீதா நன்றி கூறினார். தொடர்ந்து கல்வி விழிப்புணர்வு குறித்த வீடியோக்கள் ஒளிபரப்ப பட்டது.