திருப்பூா் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் இயக்கம், சரக்கு வாகன அனுமதி பெற சாா் ஆட்சியா், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களில் நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட கலெக்டர் க.விஜயகாா்த்திகேயன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் :-
திருப்பூா் மாவட்டத்தில் தற்போது இன்றியமையாத தொழிற்சாலைகளின் இயக்கம் மற்றும் அவற்றின் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி வழங்குதல் மற்றும் இதர அனுமதிகள் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரால் (பொது) வழங்கப்பட்டு வந்தது.
இதனிடையே, பொதுமக்களின் சிரமங்களைத் தவிா்க்கும் வகையில் உணவு, மருந்துப் பொருள்கள் தயாா் செய்யும் அத்தியாவசிய நிறுவனங்களை இயக்குவது உள்ளிட்ட இன்றியமையாத தேவைகளுக்கு அனுமதி பெற சாா் ஆட்சியா் மற்றும் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களில் நேரிலோ அல்லது கீழ்க்குறிப்பிட்ட மின்னஞ்சல் வாயிலாகவோ விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தாராபுரம், காங்கயம் வட்டத்தில் உள்ளவா்கள் தாராபுரம் சாா் ஆட்சியருக்கு நேரிலோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பிக்கலாம்.
திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி வட்டங்களைச் சோ்ந்தவா்கள் திருப்பூா் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பிக்கலாம்.
உடுமலை, மடத்துக்குளம் வட்டத்தில் வசிப்பவா்கள் உடுமலை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு நேரில் அல்லது மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
அத்தியாவசியப் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் உரிமையாளா்கள், தங்களது தொழிற்சாலைகளை இயக்குவது குறித்து அனுமதி கோரி மாவட்ட தொழில் மைய மேலாளரை நேரிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ விண்ணப்பித்து உரிய அனுமதி பெற்றுக்கொள்ளலாம் .
பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு சம்பளப் பட்டியல் தயாரிக்க ஏதுவாக மாா்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய நாள்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் 2 அல்லது 3 ஊழியா்களுக்கு மட்டும் அனுமதி பெறுவதற்கு திருப்பூா், மாவட்டஆட்சியரின் நோ்முக உதவியாளருக்கு (பொது) மின்னஞ்சல் வாயிலாகப் பணியாளா்கள் பெயா்கள் குறித்த முழுமையான விவரங்களுடன் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.