ஜனவரி மாதமே அமெரிக்காவிற்கு கொரோனா பாதிப்பு குறித்து எச்சரிக்கப்பட்டது. பிப்ரவரி 15ம் தேதிதான் அமெரிக்காவில் முதல் நபருக்கு கொரோனா வந்தது. ஆனாலும் கூட, நிறைய நேரம் இருந்தும் கூட அமெரிக்கா கொரோனாவிற்கு எதிராக சரியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்யவில்லை.
முக்கியமாக அமெரிக்கா காண்டாக்ட் டிரேசிங் முறைகளை செய்யவில்லை. முதல் 10 நோயாளிகளின் உறவினர்கள் யாரும் சோதனை செய்யப்படவில்லை. அவர்கள் சந்தித்த நபர்கள் யார் என்று சோதனை செய்யப்படவில்லை. அவர்கள் எங்கே சென்று வந்தார்கள், எப்படி கொரோனா வந்தது என்று கூட சோதனை செய்யவில்லை. இதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் கொஞ்சம் கூட மெனக்கெடவில்லை. அதேபோல் மோசமான மருத்துவ வசதியும் அமெரிக்காவின் இந்த மோசமான நிலைக்கு காரணம் ஆகும். அங்கு பொது சுகாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளதை இந்த கொரோனா வெளிப்படையாக உலகிற்கு காட்டியுள்ளது. மக்களுக்கு போதுமான இன்சூரன்ஸ் வசதிகள் இல்லை. அதேபோல் போதிய எண்ணிக்கையில் ஆரம்ப சுகாதார மையங்கள் இல்லை. மிக முக்கியமாக பல்வேறு துறைகளில் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள் இல்லை.
அதேபோல் தற்போதும் கூட கொரோனாவிற்கு சோதனை செய்ய அமெரிக்கா பெரிய கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. அமெரிக்காவின் Centers for Disease Control and Prevention (CDC) என்று அழைக்கப்படும் மத்திய நோய் கட்டுப்பாட்டு மையம் மட்டும்தான் கொரோனா சோதனைகளை செய்யும் என்று கட்டுபாடு இருந்தது. அதாவது 50 மாநிலங்களில் கொரோனா சோதனை செய்ய முடியாது. அட்லாண்டாவில் மட்டும்தான் கொரோனா சோதனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது.
அதன்பின் பிப்ரவரி இறுதியில் அமெரிக்காவில் கொரோனா காரணமாக முதல் நபர் பலியானார். பிப்ரவரி 29ம் தேதி இந்த நபர் பலியான பின் மார்ச் 1ம் தேதிதான் சிடிசி தனது கட்டுப்பாடுகளை தளர்த்தியது. அமெரிக்கா முழுக்க கொரோனா சோதனைகளை செய்யலாம் என்று கூறியது. அதுவரை இந்த கட்டுப்பாடுகள் இருந்தது. தொடக்கத்தில் இருந்த இந்த மோசமான கட்டுப்பாடுகளும் கூட, கொரோனா பரவ முக்கிய காரணம் ஆகும். அரசியல் இருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளது. ஒவ்வொரு மாகாணத்திற்கு கவர்னர்கள், செனட்டர்கள் உள்ளனர். இவர்களுக்கும் இடையிலும் கருத்து வேறுபாடு, முடிவு எடுக்கும் அதிகாரத்தில் குழப்பங்கள் இருந்தது. கொரோனாவிற்கு எதிராக யார் சொல்வதை யார் கேட்பது என்று குழப்பம் இருந்தது. இந்த மோசமான அரசியல் போட்டியும், இந்த போரில் அமெரிக்கா தொடர்ந்து தோல்வி அடைய முக்கிய காரணம் ஆகும்.