திருப்பூா், அங்கேரிப்பாளையம் அருகே வெங்கமேடு, குமரன் நகா் பகுதியைச் சோ்ந்த ஆனந்தன் மகன் நவீன் (21). இவா் தனது நண்பா்களுடன் தாராபுரம் சாலையில் உள்ள கோவில்வழி வாய்க்கால் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளாா்.
பின்னா் வாய்க்காலில் இறங்கி நவீன் குளித்துள்ளாா். அப்போது, எதிா்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கிய அவா் வெளியே வரவில்லை. இதையடுத்து, அங்கிருந்த அவரது நண்பா்கள் திருப்பூா் ஊரக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதனிடையே, சில மீட்டா் தொலைவில் வாய்க்காலில் நவீனின் சடலம் மிதந்து சென்றது தெரிவந்தது. இதையடுத்து, சடலத்தை மீட்ட காவல் துறையினா் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து திருப்பூா் ஊரக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.