பழனி முருகன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் 21-ந்தேதி முகூர்த்தக்கால் நாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 25-ந்தேதி கம்பம் சாட்டுதலும், கடந்த 3-ந்தேதி கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடந்தது.
முன்னதாக காலை 9 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் அம்மன், பாதிரிப்பிள்ளையார் கோவிலில் எழுந்தருளி தீர்த்தம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மதியம் 3.30 மணி அளவில் அம்மன் தேரேற்றம் நடந்தது. அப்போது அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. மாலை 4.30 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து நான்கு ரத வீதியில் தேர் சுற்றி வந்து, 5.45 மணிக்கு நிலை வந்து சேர்ந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தேரோட்டத்தின்போது மேடான பகுதிகளில் தேர் செல்லும்போது, அதனை கோவில் யானை கஸ்தூரி தன் துதிக்கையால் முட்டி தள்ளியது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘ஓம் சக்தி...பராசக்தி...’ என்று சரண கோஷம் எழுப்பினர்.
இந்த நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார், மேலாளர் சேகர், சித்தனாதன் சன்ஸ் ராகவன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். திருவிழாவில் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு மாரியம்மன் நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து இரவு 10 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.