திருப்பூரில், ரூ.2.1/2 கோடி மதிப்பில் அனைத்து சமுதாய மக்களுக்கும் உணவு பொருட்களை வழங்கி வருவதாக திருப்பூர் மாவட்ட அனைத்து இந்திய ஜமாத் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து அதன் கூட்டமைப்பின் தலைவர் அப்துல் மஜீத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த 21 நாட்களாக மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளை பின்பற்றி திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைத்து நோயினாலும், பசியினாலும் இறக்கக்கூடாது என அனைத்து இந்திய ஜமாத் கூட்டமைப்பு, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அனைத்து சமுதாய ஏழை, எளியவர்களுக்கு உணவளித்து கொண்டிருக்கிறோம். கடந்த 21 நாட்களாக வறுமையில் உள்ள14,740 குடும்பங்கள் என கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள அரிசி, பருப்பு, ஆயில், அஸ்கா, உப்பு, புளி, மிளகாய் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கியிருக்கிறோம். மேலும் இந்த அமைப்புகளின் உள்ள அனைத்து நிர்வாகமும் தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறோம். இதன் மதிப்பு ரூ.1. 1/2 கோடியாகும்.மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து
அனைத்து மக்களுக்கும் உதவி செய்ய தயாராக இருக்கிறோம்.
திருப்பூரில் இஸ்லாமியர்களால் மட்டுமே கொரோனா பரவுவதாக தவறான வதந்தி பரப்பப்பட்டு வருவதாகவும் , அதே போல் கொரோனா பாதித்தவர்களின் பெயரை வெளியிடக்கூடாது என்று சுகாதாரத்துறை கூறிய நிலையில் தற்போது அவர்களின் முழு விபரமும் சமூக வலைதளங்களில் பரவி வருவதை கண்டிப்பதோடு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நோய் இருந்தால் அதற்கான சான்றிதழை கொடுக்க வேண்டுகிறோம். மேலும் இரவு 12 மணிக்குமேல் வீட்டிலிருக்கும் குழந்தைகளையும், பெண்களையும் காவல்துறையினர் அழைத்துச் செல்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். பகல் நேரத்தில் அழைத்து சென்றால் கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பு தருவோம் என தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். போட்டியின்போது கூட்டமைப்பு பொதுச்செயலாளர் முகமது யாசர், பொருளாளர் தஸ்தகீர் உள்ளிட்டவர் உடனிருந்தனர்.