திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் பகுதியில் மது விற்பனை நடப்பதாக திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்ததின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தி அங்கு மது விற்பனை செய்த லட்சுமி நகரை சேர்ந்த 37 வயது அய்யப்பன், ராம்நகரை சேர்ந்த 47 வயதுள்ள முத்துராமு 2 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 208 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
விசாரணையில், கொடிக்கம்பம், சாந்தி தியேட்டர், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பகுதியில் உள்ள பார் உரிமையாளர்கள் தங்களிடம் மது பாட்டில்களை கொடுத்து அதிக விலைக்கு விற்பனை செய்து கொடுத்தால் கூடுதலாக பணம் கொடுப்பதாக கூறியதால் மது விற்பனை செய்ததாக அய்யப்பன், முத்துராமு போலீசாரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர் மேலும் பார் உரிமையாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும், இதுகுறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.