உரிகம் வனச்சரகத்தில் உள்ள பிலிகல் காப்புக்காட்டில் வேட்டை நாயைப் பயன்படுத்தி மானை வேட்டையாடி அதன் இறைச்சியைக் கடத்திச் செல்ல முயன்ற 3 பேர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஜவளகிரி, உரிகம் உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் உள்ள காப்புக்காடுகளில் அரியவகை பட்டியலில் இடம் பெற்றுள்ள வன உயிரினங்களான யானை, சிறுத்தைப் புலி, கரடி, காட்டெருமை, புள்ளிமான், முயல், மயில், மலைப்பாம்பு உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் வசித்து வருகின்றன. வனத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த வன உயிரினங்களை வேட்டையாடுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட வனத்துறை சார்பில் சிறப்பு வேட்டைத் தடுப்புக் குழு அமைக்கப்பட்டு காப்புக்காடுகளில் தீவிரக் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உரிகம் வனச்சரகத்தில் உள்ள பிலிகல் காப்புக்காட்டில் மானை வேட்டையாடி அதன் இறைச்சியைக் கடத்திச் செல்ல முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது