நாளை முதல்முகக்கவசம் அணியாவிட்டால் 5000 அபராதம் அல்லது 3 வருட சிறை தண்டனை அகமதாபாத் நகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா அறிவிப்பு.
உலகினையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து குஜராத்தில் 432 பேருக்கு கொரோனாவின் தாக்கம் உள்ள நிலையில், அங்கு 22 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, வரும் திங்கள் கிழமை (நாளை) முதல் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அதை கடைபிடிக்க தவறும் பட்சத்தில் அவர்களுக்கு ரூ .5,000 அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகமதாபாத் நகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், திங்கள்கிழமை காலை 6 மணி முதல், அகமதாபாத் நகர நகராட்சி எல்லையில் உள்ள அனைவரும் பொது இடங்களில் வெளியே செல்லும்போது கட்டாயமாக முகமூடி அணிய வேண்டியிருக்கும். முகமூடிகள் இல்லாமல் காணப்படுபவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு அபராதத்தை கட்ட தவறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.