கடந்த சில தினங்களுக்கு முன்பு அவினாசி ஒன்றியம் வடுகபாளையம் ஊராட்சி பிச்சாண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சிலர் நிவாரண உதவி கேட்டு வீடியோ ஒன்றை வாட்சப்பில் பகிர்ந்தனர்.
அந்த வீடியோவில் ஊர் மக்கள் சிலர் நெருக்கமாக நின்று கொண்டு ஊரடங்கு உத்தரவால் எங்கும் வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளோம். வருமானம் இல்லாமல் உணவிற்கு மிகவும் சிரமப்படுகிறோம். யாரவது முன் வந்து உதவ வேண்டுகிறோம் என்று ஒரு பெண் பேசியிருந்தார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் வீட்டை விட்டு வெளியே வர பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளியே வரும் போது முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுத்தப் பட்டிருக்கிறது.
நெருக்கமாக நின்று பதிவிட்டிருந்த வீடியோவை பார்த்த வடுகபாளையம் கிராம நிர்வாக அலுவலர் மோகன்குமார் சேவூர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் பிச்சாண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சிலர், ஊரடங்கு உத்தரவை மீறி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், ஒன்றாக கூடி நிற்கிறார்கள். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இதன் பேரில் சேவூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.