உடுமலை அரசு மருத்துவமனையில் சளி, இருமல், காய்ச்சல் என்று வருகின்ற, நோயாளிகளுக்கு கொரோனா அறிகுறி முதல்கட்ட மருத்துவ பரிசோதனைசெய்வதற்கு மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக கண்ணாடி கூண்டு வைக்கப் பட்டுள்ளது. இந்த கண்ணாடி கூண்டிற்குள் இருக்கும் மருத்துவர், இந்த கூண்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள 2 துவாரங்கள் வழியாக கைகளை வெளியே விட்டு, வெளிப்பகுதியில் உட்கார்ந்திருக்கும் நோயாளியை பரிசோதனை செய்வார்.
அதன்படி உடுமலை அரசு மருத்துவமனைக்கு சளி, இருமல், காய்ச்சல் என்று வருகின்ற நோயாளிகளுக்கு முதல்கட்டமாக கொரோனா தொற்று அறிகுறி ஏதும் உள்ளதா? என்று பரிசோதனை செய்யப்படுகிறது. அவ்வாறு தொற்று அறிகுறி ஏதும் இல்லாத பட்சத்தில் மருந்து, மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். கொரோனா தொற்று முதல்கட்ட அறிகுறி தென்பட்டால் மட்டும் மருத்துவர் குழுவினரின் ஆலோசனைப்படி மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? என்ற மருத்துவ பரிசோதனைக்கு, மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி கூண்டு நேற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதன் பயன்பாட்டை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.