சென்னை: கொரோனா நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழுவினருடன், முதல்வர், பழனிசாமி இன்று (ஏப்.,9) ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, பல்வேறு துறைகள் வழியே, ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க, மத்திய, மாநில அரசுகள் இடையேயும், மாநிலம், மாவட்டம் இடையேயும், ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு குழு, அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி குழு; தனியார் சுகாதாரப் பணிகள் ஒருங்கிணைப்பு குழு உட்பட, 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவின் உறுப்பினர்களாக, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இக்குழுவினர் உடனான ஆலோசனை கூட்டம், இன்று காலை, 11:00 மணிக்கு, தலைமை செயலகத்தில் நடக்க உள்ளது. கூட்டத்திற்கு, முதல்வர், பழனிசாமி தலைமை வகிக்கிறார்.
கூட்டத்தில், கொரோனா நோய் தடுப்புக்கு, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டம் முடிந்ததும், முதல்வர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.