மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவேக் சர்மா வயது 24. சிற்பியான இவர், வேலை காரணமாக குஜராத் மாநிலத்தில் பனஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள கோவிலில் தங்கி இருந்தார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அமல்படுத்தியதால், அவர் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லையே என சோகத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.
தான் வேலை பார்த்த கோவிலில் இருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ள நடேஸ்வரி என்ற கிராமத்தில் எல்லைப்பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நடேஸ்வரி அம்மன் கோவிலில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் விவேக் சர்மா கிடந்தார். அவரது கையில் துண்டிக்கப்பட்ட நாக்கு இருந்தது. அங்கிருந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் எல்லை பாதுகாப்பு படையினர் அனுமதித்தனர்.
வீடு திரும்ப முடியாத சோகத்தில் இருந்து வந்ததால், ஊரடங்கு தளர்த்தப்பட வேண்டும் என வேண்டிக் கொண்டு தனது நாக்கை கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தும் விதமாக, அவர் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனாலும் அவர் குணமடைந்து என்ன நடந்தது என்பதை விளக்கினால் மட்டுமே உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.