இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்து உள்ளது. கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 872 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனாவால் இந்தியாவிலேயே அதிக இறப்புகளை கண்டுள்ள 2-வது மாநிலம் குஜராத் ஆகும். இங்கு இதுவரை 133 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்து உள்ளனர். முதல் இடத்தில் மராட்டிய மாநிலம் உள்ளது. சீனாவின் உகான் நகரை தாக்கிய கொரோனா வைரஸின் எல்-வகையின் ஆதிக்கம் காரணமாக இது இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் (ஜிபிஆர்சி) விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், சமீபத்தில் நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் மரபணு பரிசோத்னையில் சீனாவின் உகான் நகரில் கண்டறியபட்ட எல்-வகை வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் எஸ்-வகை ஒன்றோடு ஒப்பிடும்போது எல்-வகை கொரோனா வைரஸ் மிகவும் கடுமையானது. இந்த வைரஸ் குஜராத் மாநில அதிக இறப்பு விகிதத்திற்குப் காரணமாக இருக்கக்கூடும். இருப்பினும், இதை உறுதிப்படுத்த எந்த ஆராய்ச்சியும் நடத்தப்படவில்லை என்று கூறினார்.
குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மைய இயக்குனர் சிஜி ஜோஷி கூறும் போது
வெளிநாடுகளில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட பகுப்பாய்வில், கொரோனா வைரஸ் நோயாளிகளிடையே அதிக இறப்புக்கள் பதிவாகும் இடத்தில் எல்-வகை வைரஸ் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. உகானில் இந்த வைரஸ் பரவல் அதிகமாகக் காணப்படுகிறது. மரபணு வரிசைமுறை சோதனைக்காக ஒரு நோயாளியிடமிருந்து நாங்கள் சேகரித்த கொரோனா வைரஸ் மாதிரியில் எல்-வகை உள்ளது. எஸ்-வகை மரபணுவுடன் ஒப்பிடும்போது இந்த திரிபு மிக அதிகமான வைரஸைக் கொண்டுள்ளது" என்று அவர் கூறினார்.