மளிகை வாங்க கடைக்கு அனுப்பினால் தாய்...
மணமகளுடன் வந்து நிற்கிறான் மகன்!! -
கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலைந் யில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மளிகைப் பொருட்கள் வாங்க கடைக்கு சென்ற தனது மகன், வீட்டிற்கு திரும்பும் போது மணப் பெண்ணுடன் வந்துள்ளதாக, அந்த இளைஞனின் தாய் புகார் அளித்துள்ளார். வித்தியாசமான இந்த புகாரை விசாரித்தபோது, மளிகை பொருட்கள் வாங்க தனது மகனை கடைக்கு அனுப்பியதாகவும், ஆனால் வரும் போது ஒரு பெண்ணை திருமணம் முடித்து அழைத்து வந்துள்ளதாகவும் தாய் கூறினார். மேலும் இதனை தனது மனம் ஏற்றுக் கொள்ளவில்லை, மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக திருமணம் முடிந்த அந்த 26 வயது குட்டு என்ற இளைஞர் கூறுகையில், எனக்கும், சவிதா என்ற பெண்ணுக்கும் 2 மாதங்களுக்கு முன்பே ஹரித்வாரில் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் முடித்ததற்கான ஆவணங்கள் என் கைக்கு வரவில்லை. ஊரடங்கு பிரச்னையால் ஹரித்வாருக்கு சென்று ஆவணங்களை வாங்க முடியவில்லை. அதனால் டெல்லியில் வாடகை வீட்டில் எனது மனைவியை தங்க வைத்தேன். அந்த வீட்டு உரிமையாளரும் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். இதனால் மளிகை பொருட்கள் வாங்குவதாக கூறிவிட்டு, மனைவியை என்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்தேன் என்றார்.
இருவரையும் வீட்டில் தங்க வைக்க அந்த இளைஞரின் தாய் அனுமதிக்காததால், ஊரடங்கு முடியும் வரை சவிதா தங்கியிருந்த வாடகை வீட்டிலேயே இருவரும் தங்க அனுமதிக்குமாறு வீட்டு உரிமையாளரிடம் சாஹிபாபாத் போலீசார் பேசியுள்ளனர். ஊரடங்கு முடிந்த பின்னர் திருமணம் முடிந்ததற்கான ஆவணங்கள், இருவரும் சம்மதம் உள்ளிட்வை குறித்து கேட்டு விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.