திருப்பூர் சேவாபாரதி அமைப்பின் சார்பில் பல்வேறு விதமான கொரோனா நிவாரணப்பணிகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. மக்களிடையே நேரடியாக தொடர்பில் இருக்கும் தன்னார்வலர்களுக்கு சேவாபாரதி மருத்துவர்கள் குழுவின் சார்பாக மருத்துவப்பரிசோதனைகள் வாராவாரம் நடைபெற்று வருகிறது. சேவாபாரதி தன்னார்வலர்கள் மட்டுமின்றி கடந்தவாரம் ஞானாலய வள்ளலார் மடத்தின் தன்னார்வலர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக இன்று (24.04.2020 - வெள்ளிக்கிழமை) திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலையில் பணியாற்றிவரும் பொது விநியோகத் திட்ட பணியாளர்கள் & அலுவலகப்பணியாளர்கள் என சுமார் 95 பேர்களுக்கு இன்று உடல் வெப்பநிலை, இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு & பொது பரிசோதனைகள் நடத்தப்பட்டது. மாவட்ட கூட்டுறவு பண்டக சாலையின் வழங்கல் அதிகாரி நர்மதா, காந்திமதி, மேலாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் சுந்தரம் நர்சிங் ஹோம் மருத்துவர் S.பாரதி, ஸ்ரீசக்தி மருத்துவமனை மருத்துவர் சத்தியமூர்த்தி, ஆதார் மருத்துவமனை மருத்துவர்கள் செந்தில்குமார் & திரு.கோகுல் ஆகியோர் தலைமையில் செவிலியர்கள் குழுவுடன் பரிசோதனை செய்தனர்.
சேவாபாரதி தன்னார்வலர்கள் பரிசோதனைக்கு வந்தவர்களுக்கு முககவசம் அணிவித்தும் & ஒருவர் பின் ஒருவராக வரிசைப்படுத்தியும் அனுப்பி வைத்தனர்.
அடுத்தகட்டமாக கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் பணியாற்றிவரும் பிற பணியாளர்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (28.04.2020) காலையில் மீண்டும் மருத்துவப் பரிசோதனைகள் நடைபெறவுள்ளது.