பி.காம்.படித்து விட்டு பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வருபவர் விசாலாட்சி இவர் வயது 39. திருப்பூர் செல்லப்பபுரம் பகுதியில் தனது 60 வயது தாயாருடன் வசித்து வருகிறார். சிறு வயதாக இருக்கும் போது தெருநாய்களை கல்லால் அடித்து 4 முறை கடி வாங்கிய விசாலாட்சியிடம் அவருடைய அப்பா நாய்களை துன்புறுத்தக்கூடாது. அதற்கு சாப்பாடு போட வேண்டும் என்று சொல்லியுள்ளார்.
அப்பாவுடன் சென்று தெருநாய்களுக்கு பிஸ்கெட் கொடுத்து பழக்கப்பட்ட விசாலாட்சி, தெருநாய்கள் காயமடைந்து கிடந்தாலும், நோய்வாய்ப்பட்டு இருந்தாலும் அவற்றுக்கு மருந்து, மாத்திரை கொடுக்கும் பணியை செய்து வருகிறார்.கடந்த 12 ஆண்டுகளாக தெருநாய்களுக்கு சாப்பாடு போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சின்னதோட்டம், புஷ்பா நகர், கே.எஸ்.சி. பள்ளி வீதி, பழைய பஸ் நிலையம், ஷெரீப்காலனி பகுதிகளில் தினமும் 60-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு ஒருவேளை சாப்பாடு போட்டு உன்னத சேவையாற்றி வருகிறார். இதற்காக தினமும் அரிசியை சமைத்து பால் ஊற்றி வாளியில் சுமந்து சென்று வீதி, வீதியாக நடந்துசென்று தெருநாய்களுக்கு சாப்பாடு வைத்து வருகிறார்.
ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாததால் வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார். இந்நிலையில் தனது நகைகளை ரூ.10 ஆயிரத்துக்கு அடகு வைத்து அந்த பணத்தைக் கொண்டு ஊரடங்கு காலத்தில் தெருநாய்களுக்கு தினமும் சோறு போட்டு வருவது அனைவரையும் நெகிழச் செய்கிறது.