கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 17-ந் தேதி வரை தொடரும் என்று அரசு அறிவித்திருக்கிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்த நிலையில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 238 டாஸ்மாக் கடைகள் உள்ளன. கொரோனா கட்டுப்பாட்டு பகுதியை தவிர மற்ற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப் பட்டன. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 12 கடைகள், புறநகர் பகுதியில் 9 கடைகள் என்று 21 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. மீதம் உள்ள 217 கடைகள் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன.
குடையுடன் வந்தால் தான் மதுபானம் கிடைக்கும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் முன்பே அறிவித்திருந்தார். இதனால் மதுப்பிரியர்கள் குடையுடன் காலை 8 மணி முதல் டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு வரிசையில் காத்திருந்தனர். அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு முன்பும் போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முககவசம், குடை மற்றும் ஆதார் அட்டையுடன் வர வேண்டும் என்று ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளுக்கு முன்பும் அறிவிப்பு பதாகை தொங்கவிடப்பட்டு இருந்தன. குடையை பிடித்தபடி தடுப்புக்குள் வரிசையில் காத்திருந்த மதுப்பிரியர்கள் ஆதார் அட்டையை காண்பித்து மதுவாங்கி சென்றார்கள். ஒருவருக்கு அதிபட்சமாக 4 குவாட்டர் அல்லது 2 ஆப் அல்லது 1 புல் என்ற அளவில் மது விற்பனை செய்யப்பட்டது.
டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு உரிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து கலெக்டர் மாநகரில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார். அதுபோல் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் லூர்துசாமி மற்றும் அதிகாரிகள் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.