திருப்பூரில், பின்னலாடை நிறுவனங்கள் இயங்க அனுமதி அளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு தெற்கு
தொகுதி எம்.எல்.ஏ.,சு.குணசேகரன் நன்றி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் பகுதிகளில் இயங்கும் பின்னலாடை மற்றும் அதை சார்ந்த உபதொழில்களின் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.கொரோனாஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு நிவாரணமாக திருப்பூர் தெற்கு தொகுதியில் மட்டும் 21ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.இருந்த போதிலும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டுமெனில், தொழில் நடந்தால் தான் ஒவ்வொருவரும் அவர்களது அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதால், அவர்களது வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக திருப்பூர் மக்கள் சார்பில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களை திறக்க ஆவண செய்யும்படி தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தேன். எங்களது கோரிக்கையை ஏற்று பின்னலாடை நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் கோடானுகோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்றோம். அதே நேரம் பொதுமக்கள் அனைவரும் இனிவரும் காலங்களிலும் முழுமையாக சமூக விலகலை கடைப்பிடித்தும், முக கவசம் அணிவது, அடிக்கடி சோப் மூலம் கைகழுவுவது போன்ற நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து நேரத்திலும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கண்டவாறு திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.சு.குணசேகரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.