திருப்பூர் மாவட்ட கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:
கொரோனா வைரஸ் நோயை முற்றிலும் தடுத்திடும் விதமாக சமூக தனிமைப்படுத்துதலை தீவிரப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில், குற்றவியல் விசாரணை நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் கடந்த 24.03.2020 முதல் 30.06.2020 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்திடும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும் போதும், பொது இடங்களில் நடமாடும் போதும் உரிய முறையில் முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாக வீட்டை விட்டு வெளியில் வரும் போதும், பொது இடங்களில் நடமாடும் போதும் உரிய முறையில் முக்கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுபவர்களுக்கும், பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கும் முதன்முறையாக இருப்பின் காவல் துறையினர் மற்றும் உள்ளாட்சித்துறையினர் மூலம் ரூ.100/உடனடி அபராதம் விதிக்கப்படும் என்றும் மீண்டும் அவ்வாறான நிலையில் பிடிபடின் ரூ.500/உடனடி அபராதம் விதிக்கப்படும் எனவும் மூன்றாவது முறையாக இருப்பின் காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்வதுடன் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்படி கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் பத்திரிக்கை செய்தி வாயிலாகவும் இணையவழி வாயிலாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளின் மேலும் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜவுளி கடைகள், நகைகடைகள், மளிகை கடைகள், காய்கனி விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான வணிக நிறுவனங்களிலும் பணிபுரியும் பணியாளர்கள் முக்கவசம் அணிந்திருப்பதுடன் தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்தல், கை கழுவுதல் போன்ற அனைத்து விதமான சுகாதார நடவடிக்கைகளையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். மேலும் வருகை தரும் பொதுமக்களையும் மேற்காண் வழிமுறைகளை தவறாது பின்பற்ற செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் எனவும், இவ்வாறான உரிய பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்க தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடைகள்/நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என்பதும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.