கொரோனா அதிகம் பதித்த சென்னையில் மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் கொரோனா தடுப்பு பணியில் பரபரப்போடு ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணியில் கல்லூரி மாணவ- மாணவிகளும் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி உள்ளனர். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி என்ஜினீயர் ஒருவர் தன்னோடு கொரோனா பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிக்கு காதல் வலை விரித்துள்ளார்.
அவர் அந்த மாணவிக்கு செல்போனில் வழிந்து பேசி தனது காதலை வெளிப்படுத்திய ஆடியோ வாட்ஸ்-அப்பில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணம் ஆன அந்த என்ஜினீயரின் தொல்லை தாங்காமல் குறிப்பிட்ட அந்த மாணவி இதுகுறித்து சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துணை கமிஷனர் ஜெயலட்சுமி விசாரித்து நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ஐகோர்ட்டு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் கமலக்கண்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பிறப்பித்துள்ளார்.