தமிழகத்தில் முதன் முறையாக உடுமலையில் நடமாடும் திருமண மண்டபம் அறிமுகம் செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தமிழகத்தில் திருமண மண்டபம் மற்றும் கோவில்கள் முழுவதுமாக திறக்கப்படவில்லை. மேலும் திருமணத்திற்கு ஒரு சில கட்டுபாடுகளுடன் 50 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மாநில, மாவட்ட எல்லைகள், சாலைகள், உள்ளிட்ட இடங்களில் தற்போது திருமணங்கள் நடந்து வருகிறது. இதனால் மணமக்கள் மற்றும் உறவினர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த சிற்ப கலைஞர் ஹக்கீம் என்பவர் வேனில் நடமாடும் திருமண மண்டபத்தை வடிவைமைத்துள்ளார்.
இதில் அலங்காரமாக சாமி படங்கள், மற்றும் யானை, கொரிலா உள்ளிட்ட பொம்மைகளை உயிரூட்டமாக வடிவமைத்துள்ளார். இந்த நடமாடும் திருமண மண்டபத்தில் மணமக்கள் உள்பட 10 பேர் சமூக இடைவெளி விட்டு நிற்கலாம்.
முதல் திருமணமாக உடுமலை பகுதியில் உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர்- பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது . உறவினர்கள் முக கவசம் அனித்து சமூக இடை வெளி விட்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதுகுறித்து நடமாடும் திருமண மண்டபத்தை வடிவமைத்த ஹக்கீம் பேசும்போது :-
கல்யாணம் செய்து பார், வீட்டை கட்டிப்பார். என்று பெரியோர்கள் செலவை முன் நிறுத்தி கூறுவார்கள். தற்போது கொரோனா வைரஸால் கல்யாண வைபோகமே தலைகீழாக மாற்றிப் போட்டது. மேலும் அண்மை காலமாக திருமணங்கள் நடத்த மண்டபம், கோவில்கள் இல்லை இதனை கருத்தில் கொண்டு வேன் ஒன்றை வாங்கி அதனை திருமண மண்டபமாக மாற்றினேன். இதனை வடிவமைக்க 2 நாட்கள் தேவைப்பட்டது. மணமக்கள் வீட்டார் விருபப்படி அலங்காரம் மற்றும் இதர செலவு உள்பட ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் எனது கைபேசி எண் : 9976302035 அழைத்தால் ஏழை, எளியோர்களுக்கு இலவசமாக நடமாடும் திருமண மண்டபம் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
நடமாடும் மருத்துவ வாகனம், நடமாடும் ஏ.டி.எம்.எந்திரம், நடமாடும் உணவகம் போன்று அதே வரிசையில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு நடமாடும் திருமண மண்டபத்தை வடிவமைத்த சிற்ப கலைஞர் ஹக்கீமை உடுமலை பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.