விவாகரத்தான மனைவியுடன் மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் சென்னையை சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சென்னை மதுரவாயல் அருகில் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த 34 வயதான இளைஞர் பிரித்திவிராஜ். நேற்று முன்தினம் காலை இவரது வீட்டின் வாசலில் நின்றபடி திடீரென கையில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் துடித்து கதறினார்.
அவரது கதறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பிரித்திவிராஜிடம் மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். அவரது உடலில் தீக்காயம் அதிகளவில் இருந்ததால் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் அவரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது.
அவர் இதுபற்றி போலீசார் கூறியதாவது:-
பிரித்திவிராஜ் அம்பத்தூர், பாடியில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வந்தார். அவருக்கு சத்யா என்ற பெண்ணுடன் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து இருந்தனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். தற்போது வேறொரு பெண்ணுடன் பிரித்திவிராஜ் திருமணம் செய்ய இருந்தார்.
இந்தநிலையில் முதல் மனைவி சத்யாவின் சகோதரர்களான தாமு, இளையராஜா ஆகிய 2 பேரும் உறவினர்கள் சிலருடன் சேர்ந்து பிரித்திவிராஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு மாமல்லபுரம் தூக்கிச்சென்று அங்குள்ள ஒரு வீட்டில் தங்க வைத்து, தனது தங்கையை மீண்டும் திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என அவரை அடித்து உதைத்தனர். மேலும் விவாகரத்து பெற்ற முதல் மனைவி சத்யாவுடன் அவருக்கு மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.
இதில் மிகுந்த மனவேதனையில் இருந்த பிரித்திவிராஜ் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பி வீட்டுக்கு வந்து தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்ததாக அவரது மரண வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பிரித்திவிராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது மனைவி சத்யா, அவரது சகோதரர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் என சிலரை தேடி வருகின்றனர்.